பக்கம் எண் :

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
ளென்ன பயனு மில.

 

கண்ணோடு கண் இணைநோக்கு ஒக்கின் - காதலர் இருவருள் ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் சிறப்புப் பார்வையால் ஒன்றுபடின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை போற் சொல்லுஞ்சொற்கள் ஒரு பொருளும் உடையன வாகா.

நோக்கொத்தல் காதல் நோக்கின வாதல். வாய்ச்சொற்கள் மனத்தொடு பொருந்தாது வாயளவில் தோன்றுஞ் சொற்கள். இருவரிடத்துச் சிறப்பாக நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பொதுப்படுத்தி உலகின்மேல் வைத்துக் கூறியவாறு. சிறப்பு நிகழ்ச்சியாவது, காதலன் வேட்டையாடுதல் மேலும் காதலி புனங்காவல் மேலும் கருத்தூன்றியிருந்ததாகச் சொன்ன செய்தி. அவர் சொன்னவை பொய்யாதலின் பொருளற்றவை யென்பதாம். இவை புணர்தல் ஏது(நிமித்தம்)


மற்றோருரை

கண்ணோடு கண் இணை நோக்கு ஒக்கின் - ஓர் இளைஞனும் ஓர் இளைஞையுமாகிய இருவர் கண்ணிணைகளும் பார்வையா லொன்றிக் காதலைச் செய்யுமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல- அதன்மேற்பட்டு வாயினால் சொல்லுஞ் சொற்கள் சிறப்பாக ஒரு பயனும் படாதவையாதலின், முற்றுந் தேவையற்றனவாம்.

காதற்குக் கண்ணோக் கொன்றே போதும் என்றவாறு. வாய்ச்சொற்கள் என்பது எழுத்துச் சொற்களையும் உளப்படுத்தும்.