பக்கம் எண் :

பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.

 

(தலைமகன் இடந்தலைப் பாட்டின்கட் சொல்லியது)

பிணிக்கு மருந்து மன் பிற - ஊதை (வாதம்) முதலிய நோய்கட்கு மருந்தாவன, பெரும்பாலும் அவற்றிற்கு மாறான இயல்புள்ள பிற பொருள்களாம்; அணியிழை தன் நோய்க்கு மருந்துதானே - ஆனால், இவ்வழகிய கலன்களை யணிந்தவளோ, தன்னாலுண்டான நோய்க்கு மருந்து தானே யாயினாள். இஃதொரு வியப்பே!

சேடா என்னும் சலங்கைப்பூரான் கடித்தால், அதன் விளைவைத்தடுக்க, அப்பூரானையே கொன்று உலர்த்தித் தூளாக்கி வெற்றிலையில் மடித் துண்ணக்கொடுப்பர். இங்ஙனம் சில நோய்கட்கு நோயுண்டாக்கிய பொருள்களையே மருந்தாகக் கொடுப்பது வழக்கம். ஆதலால், 'மன்' பெரும்பான்மை குறித்த இடைச்சொல்லாகும். 'அணியிழை' அன்மொழித்தொகை ஏகாரம் பிரிநிலை. இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சிக்கு மறுநாளும் தலைமகன் தானே சென்று முன்கூடிய இடத்தில் தலைமகளைக் கூடியது.