பக்கம் எண் :

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ
றாமரைக் கண்ணா னுலகு.

 

(நிலையான பேரின்பத்தைப் பெறற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இங்ஙனம் நைவது தகாதென்று கழறிய பாங்கற்குச் சொல்லியது)

தாமரைக் கண்ணான் உலகு - நீ மிகச் சிறந்ததாக வுயர்த்திக் கூறும் செங்கண்மாலின் வீட்டுலகம்; தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல்- ஐம்புல வின்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில்போல இன்பஞ்சிறந்ததோ?

இஃது ஒரு பெண்ணின்பப் பித்தன் கூற்று;

"தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பா மகல்வானத்
தும்ப ருறைவார் பதி."

(நாலடி.137)

என்னும் போக்கில் அமைந்தது. ஐம்புல வின்பம் நுகர்வார் என்னும் பெயர் "கண்டுகேட் டுண்டுயிர்த்து" என்னுங் குறளினின் றமைக்கப்பட்டது. தாமரைக்கண்ணா னுலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; திருவள்ளுவர் சிவனுந்திருமாலும் ஒன்றென்னும் கடவுண் மதத்தாராதலின், சிவனடியார்க்கும் திருமாலடியார்க்கும் பொதுவாக ஒரே வீட்டுலகங்கொண்டாராதலானும்; பெண்ணின்பச் சிறப்பை உயர்வு நவிற்சியாகக் கூறுதற்கு வீட்டுலகத் தின்பத்தோ டுறழ்வதே யேற்குமாதலானும்; அவ்வுரை பொருந்தாதென்க. இனி, இதனாலே,சிவ வீட்டுலகமும் திருமால் வீட்டுலகமும் வெவ்வேறென்று கொண்டு ஏற்றத்தாழ்வு கூறும், குறுநோக்காளர் கூற்றும் பொருந்தாமை காண்க. இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழ வறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது." என்றும், காலிங்கர் கூறியதும் பெருந்தவறாம். இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கரடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல். திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.