பக்கம் எண் :

தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.

 

[நீ இவளை வரைந்து கொண்டு தம்மில்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தில் ஈடுபடல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது .]

அம்மா அரிவை முயக்கு - அழகிய மாநிறத்தையுடைய இப்பெண்ணின் தழுவல் ; தம் இல் இருந்து தமது பாத்து உண்ட அற்று - தமக்குரிய தனி மனையிற் குடியிருந்து , தம் முயற்சியாற் பெற்ற பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கலரசுகட்குப் பகுத்து , எஞ்சியதைத் தாம் உண்டாற்போல்வதே.

இல்லறஞ்செய்தார் பெறும் விண்ணின்பம் போன்ற இன்பத்தை இக்களவொழுக்கத்தாலேயே பெறுகின்றே னென்று , தலைமகன் வரைவுடன்படாது கூறியவாறு. வரைவாவது இல்லறம் தொடங்கும் கற்புச் சடங்கு. "எலிவளையுந் தனிவளை, தனிவளையுந் தன்வளை. என்னும் உரிமையுணர்ச்சி பற்றித் ' தம் இல் ' என்றும் , தாள்தந்த துண்ணலி னூங்கினிய தில்" ( குறள் 1065 ) என்பது பற்றித் தமது என்றும் , 'ஐம்புலத்தா ரோம்பல்' (குறள் 43) பற்றி 'பாத்து' என்றும் வரைவாற் சிறந்த பேறில்லை யென்பது தோன்ற ' அற்று ' என்றும் , கூறினான் . ' ஆல் ' அசைநிலை . ' அரிவை ' என்பது இங்குப் பருவங் குறியாது பெண்மை மாட்டுங் குறித்து நின்றது.