பக்கம் எண் :

வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு .

 

[இருவர்க்கும் இடையீடு படாத முயக்கு இல்லறத்திலேயே இயலுமென்று வரைவுகடாவின தோழிக்குச் சொல்லியது.]

(நீ சொல்வ தொக்கும்;) வளி இடை போழப்படா முயக்கு - ஓருடம் பென்னுமாறு இறுக ஒன்றியமையால் காற்றா லிடையறுக்கப்படாத தழுவல் ; வீழும் இருவர்க்கு இனிதே - ஒரு வரை யொருவர் விழையும் இருவர்க்கும் இன்பந் தருவதே.

தோழி நாளிடையீடு குறித்துச் சொன்னதற்கு மாறாகத் தலைமகன் காற்றிடையீடு குறித்துச் சொல்லியும் , அவள் உடம்பு பற்றி இருவர் எனக் கொண்டதை அவன் காதல் பற்றி உயிரால் ஒருவர் எனக் கொண்டு மறுத்தும் கோணை யுறழ் (வாதம்) செய்தவாறு. இதனால் வரைவுடம் படாமை தெரிவித்தான் முற்றுமை செய்யுளால் தொக்கது . ஏகாரம் தேற்றம் , ' படாஅ ' இசைநிறையளபெடை , வரைவு கடாதலாவது வெளிப்படையான கரணச்சடங்கொடு இல்லற வாழ்க்கை தொடங்குமாறு வேண்டுதல்.