பக்கம் எண் :

ஊடலுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன் .

 

[ மறைத்தல் வேண்டாமையின் அச்சமின்றியும் நாள்தோறுங் கூடுங் கூட்டமே இன்பஞ் சிறக்குமென வரைவுகடாவியவட்குச் சொல்வியது.]

ஊடல் ஊணர்தல் புணர்தல் இவை- பழகப் பழகப் பாலும் புளித்தல்போல் நாளடைவில் இன்பங் குன்றிய புணர்ச்சியினிதாதற் பொருட்டு வேண்டியதான ஊடலும் , அது முதிர்ந்து உள்ளதையுங் கெடுக்காவாறு அளவறிந்து நீக்கலும் , அதன்பின் கூடலும் ஆகிய இவையன்றோ , காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமவின்பஞ் சிறந்தவர் பெற்ற பயன்கள்.

ஆடவர் தத்தம் தொழில்பற்றிப் பிரிந்துபோதலும் , அவர் வரவு குறித்த காலங் கடந்த விடத்துப் பெண்டிர் வருந்துதலும் , வந்தபின்பும் ஏதேனுமொன்று கருதிக்கொண்டு ஊடுதலும் , அதைக் கணவர் பல்வேறு வகையில் நீக்குதலும் , அதன்பின் கணவன் மனைவியர் கூடுதலும் ஆகிய இவைதாமே , வரைந்து கொண்ட கற்பொழுக்கத்தார் பெற்ற பயன் ! வரையாமையால் அருமைப் படுவதும் , மறைவால் இன்பஞ் சிறப்பதும் , இக்களவொழுக்கப் பேரின் பத்திற்கு அக்கற்பொழுக்க வூடவின்பம் எவ்வகையிலும் ஈடாகுமோ ? . அதை நான் வேண்டேன் என்று அதை இகழ்ந்தவாறு.