பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 12. நடுவு நிலைமை

அஃதாவது, தகுதி பற்றி ஒருவரை ஒருவினைக்கு அமர்த்தும் போதும், திறமை பற்றி ஒரு துறையிற் சிறந்தவர்க்குப் பரிசளிக்கும் போதும், விலைக்குக் கொள்ளும் பொருட்டுப் பண்டங்களுள் நல்லனவற்றைத் தெரிந் தெடுக்கும்போதும், குற்றச்சாட்டுப் பற்றி ஒருவர் நடத்தையை ஆய்ந்து தீர்ப்புக் கூறும் போதும் பகை நட்பு நொதுமல் (அயல்) என்னும் முத்திறத்தும் ஒத்திருந்து உண்மைப்படி ஒழுகுதல் நன்றி செய்தவரிடத்துங் கண்ணோடி நடுநிலை திறம்பக் கூடாதென்பதற்கு இது செய்ந்நன்றியறிதலின் பின் வைக் கப்பட்டது.

நடுநிலை என்னும் சொல், சமன் செய்து சீர்தூக்குந் துலைக் கோலில் நடுநின்று ஒருபாற் கோடாத நாவின் நிலைமையினின்று எழுந்தது.

 

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

 

பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம்.

தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.