பக்கம் எண் :

மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று .

 

( இடந்தலைப் பாட்டின்கட் சொல்லியது )

நெஞ்சே - என் நெஞ்சமே ! ; மலர்காணின் - தாமரை , குவளை முதலிய மலர்களை நீகண்டால் ; இவள் கண்-யான் ஒருவனே காணப்பெற்ற இவள் கண்களை பலர் காணும் பூ ஒக்கும் என்று மையாத்தி - எல்லாராலும் எளிதாய்க் காணப்படும் பொது வகையான அப்பூக்கள் ஒக்குமென்று கருதி மயங்கி நிற்கின்றாய் , உன் அறிவிருந்தவாறு என்னே !

இது நெஞ்சொடு கிளத்தல் , இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைமகள் கண்களை ஒருபுடையொத்த மலர்களைக் காணும்போதெல்லாம் அவற்றின் கண் காதல் செய்துவந்த தலைமகன் , இதுபோது அவள் கண்களை மீண்டும் கண்டு அவற்றின் அழகைச் செவ்வையாயறிந்தானாதலின் , அம்மலர்களின் ஒவ்வாமை கண்டு ஒத்தனவாகக் கருதிய நெஞ்சை யிகழ்ந்து கூறியவாறு . மை - மயக்கம் . யாத்தல் - பொருந்துதல் .