பக்கம் எண் :

மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி .

 

(இதுவுமது)

மதி - திங்களே ! ; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இத்தாமரை மலர் போலுங் கண்ணையுடையாளின் முகத்தை யொக்க நீவிரும்பு வாயானால் ; பலர் காணத்தோன்றல் - இனியாகிலும் எல்லாருங் காணத்தோன்றாதே , நான் மட்டுங் காணத்தோன்று .

ஏற்கெனவேயுள்ள வடிவு நிலையின்மையுங் களங்கமுமாகிய குற்றங்களுடன் , பொதுமகள் முகம்போலப் பலருங்கண் டின்புறுதற் கேதுவான பரத்தைமையுங் கூறியவாறு . பலர் காணத்தோன்றாமை கூடாமையின் முகமொத்த லில்லையென்பதாம் .