பக்கம் எண் :

இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்

அஃதாவது , தலைமகன் தன்காதன் மிகுதி கூறுதலும் , தலைமகள் தன் காதன் மிகுதி கூறுதலுமாம் . இது புணர்ச்சியும் உறுப்பு நலனும் பற்றி நிகழ்வதாகலின் புணர்ச்சி மகிழ்தல் , நலம்புனைந்துரைத்தல் என்பவற்றின் பின் வைக்கப்பட்டது . இவ்வதிகாரக் குறள்களுள் முன்னைந்தும் தலைமகன் கூற்றும் பின்னைந்தும் தலைமகள் கூற்றுமாகும் .

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் .

 

( இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கண் தலைமகன் சொல்லியது . )

பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலொடு தேன் கலந்தது அற்று - பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் .

பருகக் கூடிய பாலின் குறைந்த இனிமையும் , பருகக்கூடாத தேனின் நிறைந்த இனிமையும் கலந்தாற் பருகக் கூடிய சிறந்த இனிமை பெறப்படுதலின் அதை ' வாலெயிற்று நீர்க்கு ' உவமமாக்கினான். கலந்ததற்று என்பது கலந்தற்று எனத்தொக்கது . ஏகாரம் தேற்றம் , ' பணிமொழி ' அன்மொழித்தொகை . ' எயிறூறிய ' இடவேற்றுமைத் தொகை