பக்கம் எண் :

கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர் .

 

(ஒருவழித் தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிப் பாளென்றஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது . )

எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் ஒருபோதும் கண்ணகத்து நின்றும் நீங்கார் ; இமைப்பின் பருவரார் - யாம் அதை மறந்து ஒருகால் இமைத்தோமாயினும் அதனால் வருத்தமுறார் , நுண்ணியர் - அத்துணைக் கட்புலனாகாத நுண்மை யுடையவர் அவர் .

தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் சென்றாரெனக் கருதுவார் கருதுக ; ஆயின் , யான் இடைவிடாது காணுதலின் அங்ஙனங் கருதேன் என்றவாறு . இடையறாத நினைவு முதிர்ச்சியால் என்றுங் கண்முன் நிற்றல்போல் தோன்றலாற் ' கண்ணுள்ளிற் போகார் ' என்றும் , இமைத்த போதும் அது நீங்காமையால் ' இமைப்பிற் பருவரார் ' என்றும் , கூறினாள் .