பக்கம் எண் :

இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்

அஃதாவது, களவொழுக்கத்தை விரும்பிய தலைமகன் பிறர் கூறும் அலர் தனக்கு நன்மையாக முடிவதைத் தோழிக்கு அறிவுறுத்தலும் வரைவேனும் உடன்போக்கேனும் வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரைத் தலைமகனுக்கு அறிவுறுத்தலுமாம். இது நாணுத் துறந்த விடத்து நிகழ்வதாகலின் நாணுத்துறவுரைத்தலின் பின்வைக்கப்பட்டது.

 

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

 

(அல்லகுறிப்பட்ட பின்வந்த தலைமகனைத் தோழி அலரறிவுறுத்தி வரைவு கடாயவிடத்து, அவன் சொல்வியது.)

அலர் எழ ஆருயிர் நிற்கும்-என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலராயெழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமையான வுயிர் அவளைப் பெற்றது போன்றுமகிழ்ந்து நிலை பெறும்; அதனைப் பாக்கியத்தாற் பலர் அறியார்-அவ்வுண்மையை என் நற்பேற்றினால் அலர் கூறும் பலரும் அறியார்.

அல்லகுறிப்படுதலாவது, இரவுக்குறிக் காலத்தில் தலைமகன் வரவறிவிக்குங்குறி தற் செயலாக நிகழ்ந்து, தோழியுந் தலைமகளுஞ் சென்று தலைமகனைக் காணாது திரும்புதல்.

உயிரினுஞ் சிறந்ததொன் றின்மையான் 'ஆருயிர்' என்றும்; தன் காதலியைப் பெறாமையல் அவ்வாருயிர் மிகத் துன்புற்று நீங்கும் நிலையிலிருத்தபோது, அலரெழுந்து பெறற்கரியவளை எளியளாக்கி அவளைப் பெறுதற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும் ; அதை அலர்கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர் போமாதலானும், அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பேறாக (Blessing in disguise) வாய்த்ததென்றும்; கூறினான். முற்றும்மை செய்யுளால் தொக்கது.