பக்கம் எண் :

கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.

 

[அல்ல குறியாலும் இடை யீடுகளாலும் தலைமகனைத் தலைக்கூடப் பெறாத தலைமகள் , அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறுத்தி வரைவு கடாயது.]

கண்டது ஒரு நாள் - யான் என் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒரு வேளையே; அலர் திங்களைப் பாம்பு கொண்ட அற்று - ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைக் கரும் பாம்பு கௌவின செய்திபோல , உலக மெங்கும் பரவியுள்ளது.

காட்சிக்கும் இடமில்லாதபோது இங்ஙனம் வீணாக அலர் பரவும் இக்களவொழுக்கத்தை உடனே விட்டுவிட்டு, வரைந்து கொள்ளுதல் வேண்டுமென்பதாம். 'பாம்பு கொண்டற்று' எனக் கருமியத்தைக் கரணியமாகச் சார்த்திக் கூறினாள். கதிரவன் மறைவைக் கேது என்னும் செம்பாம்பு கௌவலாகவும், திங்கள் மறைவை இராகு என்னும் கரும்புபாம்பு கௌவலாகவும், கருதியது பண்டைக் குருட்டு நம்பிக்கை. சே -சேது-கேது. இர்-இரா-இராவு-இராகு. மன்னும் உம்மும் ஈரிடத்தும் அசை நிலை யென்பர். இடையீடுகள் நிலா வெளிப்படுதலும் நாய் குரைத்தலும் ஊரார் விழாக் கொண்டாடுதலும் போல்வனவற்றால் நிகழ்வன. சிறைப்புறம் வேலிக்கு வெளிப்பக்கம்.