பக்கம் எண் :

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி .

 

கேடும் பெருக்கமும் இல் அல்ல - பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கெனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால் , அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாத வையல்ல ; நெஞ்ச்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - ஆதலால் இவ்வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை , அறிவுநிறைந்தோர்க்கு அழகாம்.

அறிவுநிறைந்தோரும் உண்மையறியாது நடுவிகந்தா மாக்கம் விரும்பி ஒருபாற் கோடுவராயின் , தம் சிறப்பிழந்து பிறர்போலாவர் என்பது கருத்து.