பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை

அஃதாவது, காதலன் காதலியை வரைந்துகொண்ட பின், தலைமகள் இல்லத்திலிருக்கத் தலைமகன் அறம்பொருள் பற்றித் தன் தொழிற்கேற்ப ஒரு வினைமேற்கொண்டு ஆயிடையுஞ் சேயிடையும் பிரிந்து செல்லுங்கால், அவள் அப்பிரிவைப் பொறாதிருத்தல். அது பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழிகூறல், அவளுக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பறிந்து கூறல், பிரிவுணர்த்திய விடத்துக்கூறல், பின் ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறுத்துக்கூறல் என நால்வகையாற் கூறப்படும்.

இஃது அறநூலாதலால், இலக்கண நூல்களிலுங் கோவைகளிலுங் கூறப்படும் பரத்தையிற் பிரிவு இங்கு விலக்கப்பட்டதாம். இதையறியாது "அறம் பொருளின்பங்களின் பொருட்டு "என இன்பத்தையுஞ் சேர்த்துக் கூறினார் பரிமேலழகர். கற்பொடு பொருந்தாத பிறனில் விழைதல் அறத்துப்பாலிலும், வரைவின் மகளிர் தொடர்பு பொருட்பாலிலும் , கூறி விலக்கப்பட்டமை காண்க. புலவிமுதலிய மூன்றதிகாரங்களிலுங் கூறப்பட்டுள்ள பரத்தைமைக் குறிப்புக்களெல்லாம், தலைமகள் தன் மடமையால் தலைமகன் மீது ஏற்றிக்கூறிய இட்டேற்றமேயன்றி வேறல்லவென்க.

பிரிவு: தூது, போர், சந்துசெய்தல், நாடுகாவல், பொருளீட்டல் என நோக்கம்பற்றிப் பலதிறப்படும். ஆரிய வேதமும் அதன் வழிப்பட்ட நூல்களுங் கற்கச்செல்லும் ஓதற்பிரிவு தமிழருக்குரிய தன்று. 'வேந்தற்குற்றுழி' என்னும் வேளாண் தலைவர் வேளிர் பிரிவும், 'வேந்துவிடுதொழில்' என்னும் வேளாளர் பிரிவும், போருள் அடங்கும்.

 

செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

 

(பிரிந்து கடிதில் வருவேனென்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது.)

செல்லாமை உண்டேல் எனக்கு உரை-தலைவ! நீ எம்மைவிட்டுப் பிரியாமை யுண்டாயின் அதை மட்டும் சொல்; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - இனி, நீ பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வாயாயின், அதை நீ வரும்வரை ஆற்றியிருந்து உயிர்வாழ்வார்க்குச் சொல்.

தலைமகள் நீ திரும்பி வரும்வரை ஆற்றியிருப்பவளல்லள், நீ பிரிந்த பொழுதே இறந்துவிடுவாள் என்பதாம். இதனாற் செலவழுங்குவித்தல் பயன். அஃதாவது தலைமகளை யாற்றுவித்து ஓரிரு நாள் கழித்துப் பிரியச்செய்தல். தலைமகளொடு தனக்குத் தான் அவள் என்னும் வேற்றுமையின்மையால் 'எனக்கு' என்றாள். இது இல்லறத்தில் முதன் முதல் நிகழ்ந்த பிரிவாதலால், தலைமகளின் மென்மை நோக்கி நேர்முகமாய்க் கூறானாயினன். இது தலைமகள் தோழிக்குக் கூறிய கூற்றாக வுரைப்பர் மணக்குடவ காலிங்க பரிதி பரிப் பெருமாளர். இது முன்ன விலக்கு.