பக்கம் எண் :

அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

 

அறிவு உடையார் கண்ணும் -உன்னிற் பிரியே னென்று தாம் உரைத்த சொல்லை மறவாதும், நம் பிரிவாற்றாத்தன்மையை நன்றாக அறிந்துமுள்ள காதலரிடத்தும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான்-ஓரொரு சமையத்துப் பிரிவு நிகழ்தலால்; தேற்றம் அரிது - அவர் இன்சொல்லும் பேரன்புச் செயலும்பற்றி, நம்பாற் பிரியாத அன்புடையரெனத் தெளியும் உறுதி அரிதாயிருந்தது.

'அரோ' அசைநிலை . உம்மை உயர்வு சிறப்பு.