பக்கம் எண் :

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின் .

 

தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின் ; யான் கெடுவல் என்பது அறிக - அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு , " நான் இனிக்கேடடைவேன் , " என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கருதுதல் மனத்தின் செயலாதலின் ' செயின் ' என்றார் . ஒருவி என்பது ஒரீஇ என அளபெடுத்தது இன்னிசை யளபெடை . நெஞ்சார நடுநிலை திறம்புவார்க்கு எச்சரிக்கை இக்குறளாற் கூறப் பட்டது.