பக்கம் எண் :

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
னோனா வுடம்பி னகத்து.

 

(இதுவுமது)

காமமும் நாணும் - என் காமநோயும் அதை யுண்டாக்கியவர்க்கு உரைப்பதைத் தடுக்கும் நாணமும்; நோனா என் உடம்பின் அகத்து - அவற்றைத் தாங்காது வருந்தும் என் உடம்பினிடத்து ; உயிர் காவாத் தூங்கும் - என் உயிரைக் காவட்டுத் தண்டாகக் கொண்டு அதன் இரு கடையிலுந் தொங்குகின்றன.

காமமும் நாணமும் ஒத்த இருதலைச் சுமைகளாக வருத்துவது தோன்றக் 'காவாத்தூங்கும்' என்றும் உயிரிருப்பதனாலேயே காமமும் நாணமுந் தோன்றுவதால் ' உயிர் காவா' என்றும் , காவாட்டுச் சுமையைத் தாங்கும் வலிமை நோயால் மெலிந்துள்ள உடம்பிற் கின்மையால் 'நோனாவுடம்பினகத்து' என்றும் , கூறினாள் . நோயும் நீங்காது நோய்நீக்கும் வழித்தடையும் நீக்காது இருதலைக் கொள்ளி யெறும்புபோல் இடர்ப்படுகின்றேன் என்பதாம். உடம்பைக் காவுவோனாக உருவகியாமையால் இது ஒரு மருங்குருவகம்.