பக்கம் எண் :

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி .

 

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் - இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரையறுத்துக்காட்டும் துலாக்கோல் போல் ; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - மனத்திற் சம நிலையாக விருந்து ஒரு பக்கஞ்சாயாது உண்மை யுரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம் .

சமன் செய்தலும் சீர் தூக்கலும் ஆகிய உவம வடைகள் , முறையே , அமைதலும் ஒருபாற்கோடாமையும் ஆகிய பொருளடைகளை ஒப்பனவாம் . ஒருபாற் கோடாமையாவது , துலாக்கோல் சீர்தூக்கிப் பொருள்களின் நிறையை உள்ளவாறு காட்டுதல்போல , முத்திறத்தாரிடத்தும் ஒத்து நின்று ஆய்ந்து கண்ட உண்மையை உள்ளவாறுரைத்தல் . இங்குக் கோடாமை என்றது கோடாதிருந்து உண்மையுரைத்தலை . ஆகவே , ஒருபாற்கோடாமையுள்ளேயே ஆய்ந்துண்மை காண்டலும் அடங்கிற்றென அறிக . இது ' கவர்ந் தற்று ' என்றது கவர்ந்துண்டலைக் குறித்தது போன்றதாம்.