பக்கம் எண் :

சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின் .

 

செப்பம் சொல் கோட்டம் இல்லது - நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம் ; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் - அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டமின்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே .

மனம் வாய் மெய் என்னும் முக்கரணங்களுள் மனமே ஏனை யிரண்டிற்கும் மூலமாதலாலும், மனத்துக்கண் மாசிலனாதலே அறமாதலாலும், சொற்கோட்ட மில்லா நடுவுநிலைக்கு உட்கோட்ட மின்மை இன்றியமையாத தென்றார். ஆயினும், கண்ணன்ன கேளிருக்கும் பெருநன்றி செய்தவர்க்கும் செல்வத்தாலும் அதிகாரத்தாலும் ஆட்டுணையாலும் வலியவர்க்கும் கருதியது செய்து முடிக்கும் கயவருக்கும் மாறாக, உயிர்நாடிச் செய்திகளில் உண்மை கூறுவதற்குத் தெய்வத் தன்மையான மனச்சான்றும் இறுதிவரினும் அஞ்சாத் தறுகண்மையும் வேண்டியிருத்தலின், அவையிரண்டும் அமையும் அருமை நோக்கி, 'உட்கோட்ட மின்மை பெறின்' என்றார்.