பக்கம் எண் :

பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றா ரெனின்.

 

(தலைமகளை யாற்றுவித்தற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவிடத்து அவள் இயற்பட மொழிந்தது.)

(இ-ரை.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்-பிரிவிற்கு உடம்படச்செய்த காதலர் இன்றுவந்து கூடாமையை நட்டோர் பழியாராயின்;பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே-பசலையடைந்தாள் என்று வேற்றுமைப்படச் சொல்லப்படாது, பசலையேயானாள் என்று ஒற்றுமைப்படச்சொல்லப்பெறுதலும் நல்லதேயாம்.

பசலையடைதல் மேனிமட்டும் பசப்பு நிறம்பெறுதல். பசலையாதல் உடம்புமுழுவதும் பசப்பாக மாறுதல். நட்டோர் என்பது அவாய்நிலையால் வந்தது;இகழ்ச்சிக் குறிப்பு. எகாரம் தேற்றம்.