பக்கம் எண் :

பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
னொருவர்க ணினறொழுகு வான்.

 

(இதுவுமது)

காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான்-காமத்தேவன் காமவின்பம் நுகர்தற்குரிய இருபாலாரிடத்தும் ஒப்பநில்லாது, பெண்பாலாரிடத்து மட்டும் நின்று காதலை யுண்டுபண்ணுவான்; பருவரலும் பைதலும் காணான் கொல்-அவர் பசலையுற்றும் படர்மிகுந்தும் துன்புறுதலையும் மனம் நோதலையும் கண்டறியானோ?

எல்லாரிடத்தும் ஒப்பநின்று ஒழுகவேண்டியவன் நடுநிலை திறம்பியும், காம வினைக்குத் தலைமை பூண்டவன் காம நுகர்ச்சிக்குரிய இருவரிடத்து மன்றி ஒருவரிடத்து மட்டும் காதலையுண்டுபண்ணிக் கடமை தவறியும் வினையறியாதும், ஆடவரை விட்டுவிட்டு மெல்லியலாரையே இரக்கமின்றி வருத்தியும், கொடுமை செய்து திரிபவனும் ஒரு தெய்வமோ? மாந்தரும் தெய்வமும் ஒரு சேரக் கைவிட்டபின் நான் உய்யுமாறென்னை யென்பதாம்.