பக்கம் எண் :

உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

 

(தலைமகன் தூதுவரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சொடு சொல்லியது.)

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு-உன்னோடு உறவுகொள்ளாதார்க்கு நீ உற்ற நோயைச் சொல்லக்கருதும் நெஞ்சே!; கடலைச்செறாய்-அவ்வருஞ் செயலை விட்டுவிட்டு உனக்குத் துயர் விளைக்குங்கடலைத் தூர்க்க முயல்வாயாக. அது உனக்கு எளிது; வாழிய- நீ நீடுவாழ்க!

நீ சொல்லக் கருதிய செய்தி நீள்பெரு நோயாதலானும், அதைக்கேட்பார் உறவிலராதலானும் உன்தூது செயற்கரியதும் பயனில் முயற்சியுமாகும். ஆதலால், அதை விட்டுவிட்டுப் பயனுள்ள வேறுவினை ஏதேனும் மேற்கொள்க என்பதாம். நீடுவாழும் நிலைமையில்லாததாகக் கருதி 'வாழிய' என வாழ்த்தினாள். 'உறாஅர்' 'செறாஅஅய்' இசைநிறை யளபெடைகள்.

ஆசிரியர் வாழ்நாள் முழுதும் பிரியாத ஒரு மனைவி வாழ்க்கையையே இங்கெடுத்துக் கூறுவதாலும், கற்பியலை ஊடலுவகையில் முடிப்பதாலும், இவ்வதிகாரத்திற் கணவனை அன்பிலியாகக் கூறியிருப்பதெல்லாம், பெண்பாவின் மென்மையும் மடமையும் பற்றிய உயர்வுநவிற்சியே என அறிந்துகொள்க.