பக்கம் எண் :

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.

 

(இதுவுமது)

தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்-தம்மாற்காதலிக்கப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைத் தவர்க்குப் பிரிவினால் வரக்கூடிய துன்பமொன்றும் இல்லாமற் போய் விடுகின்றது; காமம் எனைத்து இனிது ஒன்றே காண்-அதனாற் காமம் எத்துணையேனும் இன்பந் தருவதொன்றே காண்.

புணர்ந்தவிடத்தும் பிரிந்தவிடத்தும் ஒப்ப வினிதென்பான்-எனைத்து மினிதென்றான், தான் ஆற்றிய வகை கூறியவாறு. ஏகாரம் தேற்றம். காண் முன்னிலை யாசை.