பக்கம் எண் :

மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே
னுள்ளினு முள்ளஞ் சுடும்.

 

(இதுவுமது)

மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அக் கூட்டக்காலை யின்பத்தை ஒருபோதும் மறத்தலறியேனாய் இன்று அதை நினைக்கும்போது கூட; பிரிவுத் துன்பம் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! மறப்பின் எவன் ஆவன் - இனி, அதை அடியோடு மறந்துவிடின் நான் என்ன நிலைமையடைவேனோ! இறைவன்தான் அறிவான்.

மறத்தற்கும் உள்ளுதற்கும் செயப்படுபொருள் அதிகாரத்தாலும் மேற்குறளினின்றும் வந்தது. 'மன்' நான் உயிர்வாழ வேறொரு வழியும் பெற்றிலேன் என்பது பட நின்றமையின் ஒழியிசைக்கண் வந்தது. 'கொல்' அசைநிலை.