பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 13. அடக்கமுடைமை

அஃதாவது, செருக்கின்றியும் வரம்பிறந்தொழுகாதும் முக்கரணத்தாலும் அடங்கிநடத்தல். இது தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதும் நடுநிலை மனப்பான்மை வழியதாகலின், நடுவுநிலைமையின் பின் வைக்கப்பட்டது.

 

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

 

அடக்கம் அமரருள் உய்க்கும் - அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும்.

இருள் என்றது இருளுலகத்தை. இருளுலகமாவது நரகம். : "இருளுலகஞ் சேராதவாறு" என்று நல்லாதனார் ( திரிகடுகம் , 90) கூறுதல் காண்க. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம். விடு என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும் துணை வினைச்சொல்.