பக்கம் எண் :

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

 

(தூதுவிடக் கருதியாள் சொல்லியது.)

கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - தூக்கம் பெறாது வருந்துகின்ற என் கயல் மீன்போலும் மையுண்ட கண்கள் யான் வேண்டிக்கொண்டால் தூங்குமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - காதலரைக் கனவிற் கண்டு நான் பிரிவாற்றக் கூடிய தன்மையைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துச் சொல்வேன்.

தூதரிடம் சொல்லக் கூடாத மருமச் செய்திகள் உட்பட, எல்லாவற்றையும் பறைசாற்றினாற்போலத் தெளியச் சொல்வேன் என்னும் கருத்தினாற் 'சாற்றுவேன்' என்றாள். என் கண்களும் தூங்கச் சாற்றலுங் கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசை. முன்னுங் கண்ட பட்டறிவாற் சொன்னமையின், கனவுநிலையுரைத்த தாயிற்று. 'கயலுண்கண்' என்றாள் தன் கணவனொடு கூடியிருந்த காலத்து நலம் அழிந்தமைக்கிரங்கி. கயல் என்பது சேல்கெண்டை. 'உயல்' இறந்து படாமை.