பக்கம் எண் :

நனவினா னல்காக் கொடியார் கனவினா
னென்னெம்மைப் பீழிப் பது.

 

(விழித்தபோது காதலரைக் காணாது கனவிற் கூட்டநினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.)

நனவினான் நல்காக் கொடியார் - பிரிவுக் காலத்தில் ஒருபோதும் நனவின்கண் வந்து கூடி இன்பந்தராத கொடியவர்; கனவினான் எம்மைப் பீழிப்பது என் - கனவின்கண் மட்டும் வந்து நம்மை வருத்துவது ஏன்?

பிரிதலும் பிரிந்தபின் விரைந்து வராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும், கனவில் உடனிருந்து இன்புறுத்திக் கொண்டிருக்கும் போதே விழிப்பால் திடுமென மறைதல் பெருந்துன்பந் தருதலின் 'பீழிப்பது' என்றும், கூறினாள். இங்கும் மூன்றாம் வேற்றுமை யுருபுகள் இடப்பொருளனவே.