பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்

அஃதாவது, மாலைப் பொழுது வந்தவிடத்து அது துணையில்லா மகளிர்க்குத் துன்பந் தருவது கண்டு வருந்துதல். மாலை என்பது இரவின் முதற்பத்து நாழிகை, கணவரைப் பிரிந்த மகளிர்க்குப் பிரிவுத் துன்பம் இரு வேளைக்கும் பொதுவேனும், பகலிற்போற் பல பொருள்களைக் கண்டும் பல வினைகளைச் செய்தும் பலரொடு பேசியும் காலம்போக்கும் வாய்ப்பு இரவிலின்மையானும், மக்களைப்போன்றே விலங்குபறவைகளும் அடங்கித் துணையொடு கண்படை கொள்ளுங் காட்சி துன்பந்தருதலானும், ஆயர் புல்லாங்குழலிசை அத்துன்பத்தை மிகுத்தலானும், மாலைப் பொழுது வருந்துவதற்கிடமாயிற்று. காதலரைப் பிரிந்த மகளிர்க்குப் பொதுவாக இரவில் தூக்கம் வராமையானும், அரிதில் வருந் தூக்கத்திற் காணுங்கனவும் மெய்யான இன்பந்தராமையானும், அப்போலியின்பக் கனவும் இடைவிழிப்பால் துன்பத்தை மிகுத்தலானும், கனவுநிலையால் நீண்ட காலம் பிரிவாற்றியிருக்க இயலாமையானும், அவற்றின் விளைவான பொழுதுகண்டிரங்கல் கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.

 

மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

 

(பொழுதொடு புலந்தது)

பொழுது - மாலைப்பொழுதே!; நீ மாலையோ அல்லை - நீ முன்னாட்களில் வந்த மாலைப்பொழுதே யல்லை ; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - காதலரை மணந்து பிரிந்த மகளிரைக் கொல்லும் இறுதிக் காலமாகவே யிருக்கின்றாய், இந்நாள்.

முன்னாள் காதலரொடு கூடியிருந்த நாள்.தன்னைப் போற் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள். 'வாழி' யென்பது எதிர்மறைக்குறிப்பு.வேலை எல்லை; இங்கு வாழ்நாளெல்லையைக் குறித்தது.வேலையென்பதற்கு வேலாயிருந்தாய் என்றுரைப்பர் மணக்குடவ பரிதி பரிப்பெருமாளார்.