பக்கம் எண் :

காலைக்குச்செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

 

(இதுவுமது)

(காலையும் மாலையும் காதலர் உடனிடருந்த நாள் போலாது இன்று நேர்மாறான இயல்பு கொண்டுள்ளன. அவற்றுள்)யான் காலைக்குச் செய்த நன்று என்-நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்கு யாது?; மாலைக்குச் செய்த பகை எவன்-மாலைப் பொழுதிற்குச் செய்த தீங்கு யாது?.

முன் பெல்லாம் நடுங்கத்தக்க பிரிவச்சம் உண்டு பண்ணிய காலை, இன்று அஃதொழிந்து, இரா வென்னும் துன்பக் கடலைக் கடந்தேறும் கரையாக மாறிற்று என்னுங் கருத்தால் 'நன்றென்கொல்' என்றும், முன்னாளில் எல்லை யில்லா இன்பஞ் செய்து வந்த மாலை இன்று இறந்து படுமளவு துன்பஞ் செய்கின்ற தென்னுங் கருத்தால் 'பகை யெவன் கொல்' என்றும் கூறினாள்.'கொல்' ஈரிடத்தும் அசை நிலை. 'பகை' ஆகுபொருளி.