பக்கம் எண் :

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

 

[மாலைப் பொழுதில் நீ இங்ஙன மாதற்குக் கரணியம் என்ன என்ற தோழிக்குச் சொல்லியது.]

இந் நோய்- இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி- காலைப் பொழுதில் மொக்கு விட்டு; பகல் எல்லாம் போது ஆகி- பகற்கால மெல்லாம் பேரரும்பாக முதிர்ந்து; மாலை மலரும்- மாலைப் பொழுதில் மலராக விரியும்.

படுக்கை விட்டெழுந்த பொழுதாகலின் கனவில் நிகழ்ந்த கூட்டம் நினைந்தாற்றுதல் பற்றிக் 'காலை யரும்பி' யென்றும், பின்பு பொழுது செல்லச் செல்ல அதை மறந்து பிரிவை நினைத்து ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' யென்றும், பகல் முடிவில் மக்களும் விலங்கு பறவைகளும் தத்தம் துணையொடு அல்லது துணையை நினைந்து உறைவிடம் திரும்புவது கண்டு, முன்பு தான் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதலின் 'மாலை மலரும்' என்றும், கூறினாள். நோயைப் பூவாக உருவகியாமையின் ஒருமருங் குருவகம்.