பக்கம் எண் :

அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும் படை.

 

(இதுவுமது)

ஆயன் குழல்- முன்னெல்லாம் இனிதாய் ஒலித்த இடையன் புல்லாங் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி- இதுபோது தீப் போலச் சுடும் மாலைப் பொழுதிற்கு முன் தூதாக வந்து; கொல்லும் படை- என்னைக் கொல்வது போலத் துன்புறுத்தும் படைக்கலமு மாயிற்று.

முன்னரே வருகை யுணர்த்தலின் முன் தூதாயிற்று; கொல்லுந் தொழிலாற் படைக்கலமாயிற்று. தானே எரிக்கவல்ல மாலை இத்துணைக் கருவிகளையும் பெற்றால் என்னதான் செய்யா தென்பதாம். பின் னின்ற 'போலும்' உரையசை.

இனி, ஆயன் குழல் போலுங் கொல்லும் படை மாலைக்குத் தூதாகி அழல் போலும் என்றுமாம்.