பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்

அஃதாவது, பிரிவாற்றாத தலைமகளின் கண்ணும் தோளும் நெற்றியும் முதலிய உறுப்புக்கள் தம் அழகிழத்தல். இது மன வருத்தம் மிக்க விடத்து நிகழ்வ தாகலின், பொழுதுகண் டிரங்கலின் பின் வைக்கப்பட்டது.

 

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
நறுமலர் நாணின கண்.

 

(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)

சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)