பக்கம் எண் :

முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

 

[வினைமுடித்து மீளுந் தலைமகன் முன்னிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.]

முயங்கிய கைகளை ஊக்க- தன்னை யிறுகக்கட்டித் தழுவிய கைகளை இவட்கு நோமென்று கருதி ஒரு சிறிது தளர்த்தேனாக; பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது- அதற்குள், அச்சிறு தளர்ச்சியையும் பொறாது, பசும்பொன் வளையல்களை யணிந்த என் இளங்காதலியின் நெற்றி பசலை பாய்ந்துவிட்டது. அத்தகைய மெல்லியல் நெற்றி இப்பிரிவிற்கு யாதாகுமோ!

இனிக் கடுகிச் செல்லவேண்டுமென்பது கருத்து.