பக்கம் எண் :

கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
யொண்ணுதல் செய்தது கண்டு.

 

(இதுவுமது)

கண்ணின் பசப்போ- தென்றற் காற்று இடையிற் புகுந்ததனால் வந்த கண்ணின் பசலையோ; ஒள் நுதல் செய்தது கண்டு- தனக்கு அயலிலுள்ள ஒளிபொருந்திய நெற்றி பசந்தது கண்டு; பருவரல் எய்தின்று - துன்பமடைந்தது.

பொருள்களைக் காணுந் தன்மையில்லாத நெற்றி கைகளைத் தளர்த்த வளவிற் பசந்துவிட்டது. ஆனால், அத்தன்மையுள்ள நானோ கைகளைத் தளர்த்த பின் சிறுகாற்று ஊடறுக்கு மளவும் பசவாது வெறுமனே கண்டுகொண்டிருந்தேன், எனத் தன் மென்மைக்கேலாத வன்மையையும் அதன் வன்மைக் கேலாத மென்மையையும் ஒப்புநோக்கி வெட்கிப் போயிற்றென்பதாம். இங்ஙனம் அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலனழியும். ஆதலால், யாம் விரைந்து சென்று அவளை யடைதல்வேண்டுமென்பது கருத்து.