பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்

அஃதாவது, ஆற்றாமை மீதூரத் தனக்கொரு பற்றுக்கோடு காணாத தலைமகள், செய்வ தறியாது தன் நெஞ்சொடு பலவாறு சொல்லுதல் . இது உறுப்புக்கள் தம் அழகிழந்த விடத்து நிகழ்வதாகவின் , உறுப்பு நலனழிதலின் பின் வைக்கப்பட்டது .

 

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத் தொன்று
மெவ்வநோய் தீர்க்கு மருந்து .

 

[ தன் ஆற்றாமை தீருந் திறம் நாடியது . ]

நெஞ்சே - என் உள்ளமே ; எவ்வ நோய் தீர்க்கும் மருந்து ஒன்று- இத்துன்ப நோயைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை ; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ - எத்தன்மைய தாயினும் ஒரு முறையை எண்ணி எனக்குச் சொல்ல மாட்டாயா ?

பொதுவான மருந்தினால் தீரும் உடல்நோயன்றென்பாள் ' எவ்வநோய் ' என்றும் , கற்புத்தவிர எதையும் இழக்கும் மருத்துவ முறையாயினும் என்பாள் ' எனைத்தொன்றும் ' என்றும் ' கூறினாள் .