பக்கம் எண் :

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னு மவர்க்காண லுற்று .

 

(இதுவுமது)

நெஞ்சே கண்ணும் கொளச் சேறி - என் உள்ளமே நீ என் காதலர் பாற் செல்லலுற்றாயாயின் , இக்கண்களையும் உடன் கொண்டுசெல் ; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - ஏனெனின் ; நீ தனியாய்ச் செல்வாயாயின் , இவை அவரைக் காணவேண்டுமென்னும் பேராவலினால் , அவரைக் காட்டச் சொல்வி , என்னைப் பிய்த்துத் தின்றுவிடும்.

தின்னுதல் என்பது தின்பதுபோலத் தொந்தரவு செய்தல் ; ஆகுவினை . கொண்டு என்பது ' கொள் ' எனத் திரிந்து நின்றது, காதலரிருக்குமிடஞ் சென்று அவரை ஆசை தீரக் காணவேண்டு மென்பதாம் .