பக்கம் எண் :

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.

 

(தலைமகன் கொடுமை நினைந்து செலவுடன்படாத நெஞ்சினைக் கழறியது.)

என் நெஞ்சு- என் உள்ளமே! கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய்- யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவியின்பங் காட்டி நீக்க வல்ல காதலரைக் காணும்போது, வெளித் தோற்றத்திற் காகவேனும் சற்றுப் புலந்து பின்பு அது நீங்கமாட்டாய்; பொய்க் காய்வு காய்தி- அது செய்ய மாட்டாத நீ இன்று அவரைக் கொடியவர் எனக் கூறி வெறுப்பது போல நடிக்கின்றாய், இந் நடிப்பை விட்டுவிட்டு அவரிடஞ் செல்லத் துணிவாயாக.

கலந்துணர்த்தலென்றது கலவியின்ப ஆசை காட்டி அதனாற் புலவியை நீக்குதலை. பொய்க் காய்வு நிலையில்லாத வெறுப்பு. கண்டால் வெறுக்க முடியாது காணாதவிடத்தில் மட்டும் வெறுப்பதாற் பயனில்லை யென்பதாம்.