பக்கம் எண் :

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.

 

(நாண் தடுத்தலின் காதலரிடம் செலவொழிவாள் சொல்லியது.)

நல் நெஞ்சே- என் நன்மனமே!? ஒன்று காமம் விடு -காமம் நாண் என்னும் இரண்டனுள் ஒன்று காமத்தை விட்டுவிடு, நாண் விடு - அல்லாவிட்டால் நாணைவிட்டுவிடு, இவ்விரண்டு யானோ பொறேன்- இவ்விரண்டையும் தாங்கும் ஆற்றலோ எனக்கில்லை.

'நன்னெஞ்சே' என்றது, இன்பத்தையும் பெண்மையையும் ஒருங்கே நிலைபெறுத்தலால் நீ நல்லையென்று பாராட்டியவாறாம். இது நன்றே யெனினும், இவ்விரண்டையும் ஒருங்கே தாங்குதல் உயிருக்கு இயலாமையின், உயிரைக் காக்க வேண்டின் இவ்விரண்டுள் ஒன்றை விட்டுவிடுதல் வேண்டும். இவற்றுள் நாணே சிறந்ததாதலின், காதலர் வரும்வரை ஆற்றியிருத்தலே தக்கதென்பதாம். 'ஒன்றோ'- ஓகாரம் அசைநிலை. யானோ- ஓகாரம் பிரிநிலை. முற்றும்மை தொக்கது.