பக்கம் எண் :

உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

 

(இதுவுமது)

என் நெஞ்சு- என் மனமே!; காதலர் உள்ளத்தாராக- காதலர் உன்னகத்தாராயிருக்கவும்; நீ உள்ளி யாருழைச் சேறி- நீ அவரைத் தேடி யாரிடத்துச் செல்கின்றாய்?

உனக்குள்ளேயே யிருக்கின்றவரை நீ வெளியே தேடிச்செல்லுதல், ஒருவர் தன் இல்லத்திற்குள்ளிருப்பவரைத் தேடி வேறோரில்லம் செல்வது போலும் எள்ளி நகையாடத் தக்க செய்தி யென்பதாம்.

"உள்ள மென்புழி அம்முப் பகுதிப் பொருள் விகுதி." என்றார் பரிமேலழகர். நெஞ்சும் உள்ளமும் ஒன்றேயாதலின், உள் என்றிருக்க வேண்டிய இடப்பொருட்சொல் 'அம்' என்னும் முதனிலைப் பொருளீறு பெற்றதென்று அவர் கொண்டது சரியே.