பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 126. நிறையழிதல்

அஃதாவது, தலைமகள் தன் மனத்து அடக்கவேண்டிய பல செய்திகளைத் தன் வேட்கை மிகுதியால் வெளிவிட்டுச்சொல்லுதல். "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை". என்றார் நல்லந்துவனார் (கலி. 133). நிறையழிதற்குக் கரணியம் மேலதிகார ஈற்றுக் குறளிற் கூறப்பட்டதனால், இது நெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப் பட்டது.

 

காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

 

(நாணு நிறையு மழியாமை நீ யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

நாணுத் தாழ் வீழ்த்த நிறையென்னுங் கதவு- நாணாகிய தாழிட்டுப் பூட்டிய நிறையென்னுங் கதவை; காமக் கணிச்சி உடைக்கும் - காமவேட்கையாகிய கோடரி வெட்டிப் பிளக்கும்.

நாணுள்ள வரையும் நிறை அழியாதாகலின் அதைத் தாழாக்கியும், அகத்துள்ளவற்றைப் பிறர் கவராமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலிமையுள்ள இவ்விரு பண்புகளையும் ஒருங்கே நீக்கலின் காமவேட்கையைக் கோடரியாக்கியும், கூறினாள். இஃது உருவக வணி.