பக்கம் எண் :

காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்.

 

(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சாலடக்கப் படுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

காமம் என ஒன்று கண் இன்று- காமமென்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்ட மில்லதாயிருந்தது; யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும்- எல்லாருந் தொழில் நீங்கித் தூங்கும் நள்ளிரவிலும் என் உள்ளத்தை ஏவல் கொள்ளும்.

தன்னைத் தோற்றுவித்ததனால் தாய்போலுள்ள நெஞ்சத்தையே ஏவல் கொள்ளும் துணிவுடைமை பற்றிக் 'காமமெனவொன்று' என்றும், தகாதநேரத்திலும் வேலைவாங்குதலால் 'கண்ணின்று' என்றுங் கூறினாள்; தொழிலாளுதலாவது தலைமகன்கண் செலவிடுத்தல். 'ஓ' இரக்கக் குறிப்பு.