பக்கம் எண் :

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை .

 

(இதுவுமது)

நம் பெண்மை உடைக்கும் படை-நம் நிறையாகிய அரணை யழிக்கும் படைக்கலம் ; பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோ-பல நடிப்புச் செயல்களில் வல்ல கள்வராகிய நம் காதலரின் தாழ்மையான பேச்சன்றோ ?

வந்தாற் புலக்கவேண்டுமென்றும் , அப்புலவியை நீக்க அவர் சொல்லுஞ்சொற்களையும் செய்யுஞ்செயல்களையும் பொருட்படுத்தக் கூடாதென்றும் ' நான் கொண்டிருந்த தீர்மானத்தை அடியோடு மறந்து, கலவிக்கண் அவரினும் முற்படும் வகை பசப்பி மயக்கிவிட்டார் என்பாள் ' பன்மாயக் கள்வன் ' என்றாள் . 'பணிமொழி ' எத்துணைக் கடுஞ்சினத்தையும் எளிதில் தணிக்கும் இனிமையும் தாழ்மையுங் கலந்த வசியச் சொற்கள் . அத்தகைத் திறமையொடு அத்தகைச் சொற்களைச் சொல்லும்போது , என்நிறை யழியாது வேறென் செய்யும் என்பதாம் . ' பெண்மை ' இங்குத்தலைமைபற்றி நிறைமேல் நின்றது.