பக்கம் எண் :

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பே மெனல்.

 

(இதுவுமது)

நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு- கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவதுபோலக் காதலரைக் கண்டவுடன் நிறையழிந்துருகும் உள்ளத்தையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ- அவர் அணுகி நிற்க யாம் ஊடி அந்நிலையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உளதோ? இல்லையே!

யான் அத்தன்மையே னாகலின் அந்நிலைமையில்லை யென்பதாம் புணர்தல் தலைக்கூடி நிற்றல். அவர் புணர்ந்து, யாம் ஊடிநிற்பேம் என்பது, மணியடித்து வண்டி புறப்பட்டது என்றாற்போன்ற தனிநிலைக் கிளவியச் (absolute clause) சொல்லியமாம் (sentence).