பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்

அஃதாவது, தொலைவிடைப் பிரிவின்கண் தலைமகனுந் தலைமகளும் வேட்கைமிகுதியினால் ஒருவரையொருவர் காண்டற்கு விரைதல். இதனுள் தலைமகள் கூற்று நிறையழிவால் நிகழ்ந்ததாகலின், நிறை யழிதலின் பின் வைக்கப்பட்டது.

"தலைமகன் பிரிவும் தலைமக ளாற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையுஞ் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைந்து தலைமகள் விதுப்புற லென்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துவதல்லது தானொன்றற்குப் பெயராகாமையானும், கவிகூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையாற் கூறப்படாமையானும், அஃதுரையன்மை யறிக". என்று பரிமேலழகர் இவ்வதிகார முகவுரையிற் கூறியது சரியே. 'பிறர்' என்றது மணக்குடவ பரிப்பெருமாளரை. 'அவர்வயின் விரும்பல்' என்பது காலிங்கர் கொண்ட பாடம்.

 

வாளாற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

 

(தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது.)

அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த- அவர் எம்மைவிட்டுப் பிரிந்துபோன நாட்களைச் சுவரிற்குறித்த குறிகளைத் தொட்டுத் தொட்டு எண்ணுதலால், என் விரல்கள் தேய்ந்து போயின. கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற- அதுவுமன்றி என் கண்களும் அவர்வரும் வழியைப் பார்த்துப்பார்த்து ஒளியிழந்து பூத்துப்போயின. இவ்வாறாயும் இன்னும் அவர் வரக்காணேன்.

இனி அவரைக் காணுமாறுண்டோ வென்பதாம். 'வாள்' உரிச்சொல். புற்கென்னுதல் பொலிவற்று நுண்பொருள்களைக் காணமுடியாமை. 'நாள்' ஆகு பொருளி. நாளெண்ணுதலும் வழி பார்த்தலும் இடைவிடாது நிகழ்தலின் விதும்பலாயிற்று.