பக்கம் எண் :

இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற்
கலங்கழியுங் காரிகை நீத்து.

 

(ஆற்றாமை மிகுதலின் இடையறாது நினைத்தல் தகாது. சிறிது மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது).

இலங்கு இழாய்- விளங்குகின்ற அணிகளையணிந்த தோழியே!; இன்று மறப்பின்- காதலரை இன்று மறப்பேனாயின்; காரிகை நீத்து- என் அழகு நீங்கி; என் தோள் மேல் கலங் கழியும்- என் தோள்களின் மேலுள்ள கடகங்கள் கழன்று விடும்.

'இலங்கிழாய்' என்பது உன் அணிகள் போன்றனவல்ல என் அணிகள் என்னுங் குறிப்பினது. பரிமேலழகர் 'நீத்து' என்பதை நீப்ப எனத் திரித்தும், 'மேல்' என்பதைக் 'காரிகை' என்னுஞ் சொற்கு முன் நிறுத்தியும், "காதலரை யானிறந்து படுகின்ற, இன்று மறப்பேனாயின் மறு பிறப்பினுங், காரிகை யென்னை நீப்ப என் றோள்கள் வளை கழல்வனவாம். இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை யெய்தி யின்புறலாம்; அதனான் மறக்கற் பாலே னல்லேன்." என்று உரை கூறுவர். இங்ஙனம் வலிந்தும் நலிந்தும் கூறும் கொண்டு கூட்டுப் பொருட்கோளுரை அத்துணைச் சிறந்த தன்று.