பக்கம் எண் :

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் னெஞ்சு.

 

(இதுவுமது)

பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி- காமம் நீங்கியவராய் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நம் காதலர் காமங் கூடியவராய் நம்மிடம் திரும்பி வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும்- என் உள்ளம் வருத்தம் நீங்கி மேன்மேற் பணைத் தெழுகின்றது.

அந் நினைவின்றேல் இறந்து படுவேன் என்பதாம். வினைவயிற் பிரியு மிடத்து அதற்குத் தடையாக வுள்ள காமத்தை நோக்காது வினையையே நோக்குதலும், வினை முடிந்த விடத்துக் காமத்தையே மிகுதியாக நோக்குதலும், தலைமகனுக் கியல்பாதலின் 'கூடிய காமம்' என்றாள். இதில் ஒடு வுருபு தொக்கது. கூடிய காமத்தொடு என விரியும். கோடு கிளை. கோடு கொண்டேறுதல் மேன்மேற் கிளைத் தெழுதல். மரத்தின் தொழில் நெஞ்சினமே லேற்றப்பட்டது. 'கொடு' கொண்டு என்பதன் தொகுத்தல் இக்குறட்கு.

"கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றும் பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாரா நின்றது." என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் உரை;

'கூடிப் பிரிந்த நாயகர் வரும் வழி பார்த்து ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப் பார்க்கும். என்பது பரிதியார் உரை. கோடு மலை. குவடு- கோடு.