பக்கம் எண் :

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

 

(இதுவுமது)

கண் அன்ன கேளிர் வரின்- என் கண்போற் சிறந்த காதலர் வருவாராயின்; புலப்பேன் கொல்- அவர் வரவு நீட்டித்தமைபற்றி ஊடுவேனோ; புல்லுவேன்கொல்- அல்லது, என் ஆற்றாமைபற்றி அவரைத் தழுவுவேனோ; கலப்பேன் கொல்- அல்லது, அவ்விரண்டும் வேண்டுதலால் இருசெயல்களையும் விரவுவேனோ, இம்மூன்றுள் எது செய்யக்கடவேன்?

கலத்தலாவது முன் சற்று ஊடிப் பின் தழுவுதல். ஊடல், புலவி, துனி என்னும் மூவகைச் சடைவுகளும் முறையே, தலைமகனால் தீர்வதும் வாயிலால் தீர்வதும் ஒருவகையாலும் தீராததுமாதலின், இங்குப் புலத்தலென்றது ஊடலையே என அறிக. வருமுன்பே புல்லுதலையுங் கலத்தலையுங் கருதியமையின் விதுப்பாயிற்று. இனிக் கலப்பேன்கொ லென்பதற்கு ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ வென்றுரைப்பாரு முளர். என்பது பரிமேலழகருரை. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை. 'ஊடல்' முதலிய முச்சொல்லும் நுண்பொருள் வேறுபாடின்றியும் வழங்கப்படும்.