பக்கம் எண் :

வினைகலந்து வென்றீ கவேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து.

 

(வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்த விடத்துத் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.)

வேந்தன் வினை கலந்து வென்றீக- நம் வேந்தன் முனைந்து போர் புரிந்து வெல்வானாக; மனைகலந்து மாலை விருந்து அயர்கம்- யாமும் ஊர் சென்று மனைவியொடுகூடி அற்றை மாலைப் பொழுதின்கண் விருந்துண்டு மகிழ்வேம்.

வேந்தற் குற்றுழிப் பிரிவாவது, குறுநில வரசராகிய வேளிரும் மன்னரும் நம் தலைவராகிய வேந்தரென்னும் பெருநிலவரசர்க்குப் போர்வினை வந்த விடத்து, அவருக்குத் துணையாகச் செல்லுதல். 'மனை' ஆகுபெயர். வினைமுடியுமுன் கூறிய கூற்றாதலின் விதும்பலாயிற்று. "பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி யுரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க வென்றும். மனைகலந்தென்றும் மாலைப்பொழுதின் கண் விருந்தயர்க மென்றும், வந்த அவ்வுரை தானே அது கூடாமைக்குக் கரியாயிற்று." என்று பரிமேலழகர் கூறியிருப்பது சரியே. 'பிறரெல்லாம்' என்றது மணக்குடவ பரிதி காலிங்க பரிப்பெருமாளரை.