பக்கம் எண் :

ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

 

(இதுவுமது)

சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு- நெடுந்தொலைவு சென்ற தம் காதலர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை மனத்துட்கொண்டு, அது வருமளவும் ஏக்கம் பிடித்து வருந்தும் மகளிர்க்கு; ஒருநாள் எழு நாள் போல் செல்லும்- ஒரு நாளே பலநாள் போல் நெடிதாகத் தோன்றும்.

ஏழு என்னும் நிறைவெண் இங்குக் கழிபன்மை யுணர்த்தி நின்றது. முன்பு தலைமகள் பட்டறிவையறிந்த தலைமகன் அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு. இருநாளென்று பாடமோதுவாரும் இருந்தமை பரிமேலழக ருரையால் தெரியவருகின்றது.